ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சார்பாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் வாரவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு ஸ்பைஸ்  ரவுண்ட் டேபிள் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 அமைப்பின் தலைவர் தர்மராஜ், செயலாளர் சக்திகணேஷ், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது, ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் வயதினரை கொண்ட சமூக சேவையை மட்டும் குறிக்கோளாக கொண்ட அமைப்பாகும். 

இந்த அமைப்பின் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 849 பள்ளிகளில் 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 625 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக 72.80 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். மேலும் 3 லட்சம் குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம், கார்கில் நிவாரணம், குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 48 பள்ளிகளை கட்டிக் கொடுத்தது, சுனாமி பாதித்த பகுதிகளில் 120 பள்ளிகளை கட்டிக் கொடுத்தது என பல்வேறு சேவைகள் செய்யப்பட்டுள்ளது.

 ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் அமைப்பின் சார்பில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டு வருகிறது. வயதானவர்களை நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஈரோடு ரங்கம்பாளையம் கே.கே.நகரில் உள்ள என்.எல். கருணை இல்லம் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.

 தொடர்ந்து 10 ஆண்டுகளாக ரத்தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலமாக ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இதுவரை 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

பெருந்துறை அருகே சிலேட்டர் நகர் காதுகேளாதோர் பள்ளியில் ஓவிய போட்டி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் தவறான அணுகுமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு பாரதி கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

இந்த முகாம் மூலமாக 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். ஈரோடு கந்தம்பாளையத்தில் பார்வையற்றோர் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பிரைலி உருவாக்கவும், ஆடியோ அறை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ5.82 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது  இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment